TMMK வரலாறு

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரலாறு

மக்கள் மாநாடு என்ற அமைப்பு செப்டெம்பர் 2005- ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பற்பல ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களைத் தொடர்ந்து, அரசியல் அமைப்பாக மாற்றுவது தான் மக்கள் மாநாடு கொள்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் மக்களிடம் கொண்டு செல்ல இயலும் என்ற அடிப்படையில் 2006 சனவரியில் மக்கள் மாநாடு கட்சி அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டு, 2017ம் ஆண்டு தமிழக முற்போக்கு மக்கள் கட்சி என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் திருத்தம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது

தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காக காத்திருந்த போது, 2006 மே மாதம் தமிழ் நாடு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. எனவே, இயக்கத்தின் சார்பாக‌ சுயேட்சையாக நான்கு தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்பைடையில், வில்லிவாக்கம், அறந்தாங்கி, பேராவூரணி, ஆரணி ஆகிய தொகுதிகளில் இயக்கத்தின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள் .

இதன் பின்னர், 2006 அக்டோபர் 6 ஆம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் இயக்கம் முறைப்படி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடை பெற்று வந்தன. குறிப்பாக கீழ் வரும் நிகழ்ச்சிகளை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமிழக இரயில்வே பகுதிகளை பாலக்காடு இரயில்வே கோட்டத்துடன் இணைப்பதைக் கண்டித்தும், தமிழ் வளமும் செழுமையும் சீர்திருத்தக் கருத்துக்களும் இல்லாத மொழி என்று கவிஞர் அப்துல் ரகுமானை மத்திய அரசின் தமிழ் செம்மொழி ஆணைய உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கக் கோரியும் 2007 நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 01 . 02 . 2008 அன்று கடலூர் நகர் மன்றத்தில் மக்கள் மாநாடு கட்சி சார்பாக தமிழர்களின் பொருளாதார இறையாண்மை மாநாடு நடை பெற்றது. நாடாளு மன்றம், சட்ட மன்றம், நீதித்துறை, இந்திய அரசு பணிகளில் மொழி வாரி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும், தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மாவட்டம் வளையங்குளம், எலியார்பத்தி, நல்லூர், சோளங்கருனரி கிராமங்களில் சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து, அந்தப் பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கட்சி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை 2008 மார்ச் 17 ஆம் தேதியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தியது. அதனைத் தொடர்ந்து நடை பெற்ற பல போராட்டங்களுக்குப் பின்னர், சிறப்புப் பொருளாதார மண்டலம் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா குன்னூர் கிராமம் பள்ளியினை மீண்டும் செயல்படக் கோரி புதுக்கோட்டையில் 9-6-2008 அன்று கட்சி சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் மாநாடு கட்சி சார்பாக தஞ்சாவூரில் 2008, ஜூன் 19 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.2013ல் தமிழர் ஒற்றுமை மாநாட்டையும் கட்சி ஏற்பாடு செய்து நடத்தியது.

தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற வேண்டுமென்பதற்காக குறிப்பாக லோக் ஆயுக்தா கொண்டு வருவதற்காக 2014லிருந்து பல்வேறு நடவடிக்கைகளை இவ்வியக்கம் மேற்கொண்டு வருகிறது.லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை மக்கள் மாநாடு கட்சி 18-1-2014 அன்று சென்னையில் வெளியிட்ட‌து, இந்த வரைவுச் சட்டம் தொடர்பான மக்கள் கருத்துக்களைத் திரட்டி, லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி, அமைத்திட தமிழக அரசை வலியுறுத்திடும் கையெழுத்து இயக்கத்தை கட்சி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி,மார்ச் மாதங்களில் நடத்தியது. இந் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஊழலைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது தான் ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வாக அமைந்திடும் என்கிற அடிப்படையிலும் லோக் ஆயுக்தா மற்றும் சேவைப் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் 2015 ஏப்ரல் 18 முதல் 2015 ஏப்ரல் 29 வரை கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டது.ஊழலுக்கு எதிரான போராட்டமாக லோக் ஆயுக்தா மற்றும் சேவைப் பெறும் உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 19,20,21 சனவரி,2016 தேதிகளில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கட்சி நடத்தியது.ஊழல் தமிழகத்தில் நீக்கமற நிறைந்துள்ள நிலையில் தமிழகம் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சனைகளையும் விட ஊழலை ஒழிப்பதே முதன்மையாக உள்ளது. இத்தகைய நிலைபாடுகளுக்கு அடிப்படையாக ஊழலை ஏற்றுக்கொள்கிற மனநிலையில் தமிழக மக்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தான் அடிப்படையில் பிரச்சனையாக எழுந்துள்ளது. இத்தகைய மனநிலையானது தேர்தல் காலங்களில் வாக்குக்கு பணம் பெற்றுக் கொள்வதையும் நியாயப்படுத்துகிறது.

தங்களுடைய சட்டபூர்வமான அடிப்படைத் தேவைகளை பெறும் நிலையில் கையூட்டு அளித்து பெறுவதை தமிழக மக்களே மனமுவந்து செய்வதை காண முடிகிறது. கால நீட்டிப்பு இன்றி குறுகிய காலத்தில் தேவைகளைப் பெற்றோம் என்கிற நியாயத்தை கையூட்டு அளிப்பதற்கான அவசியமாக மக்கள் கருகிறார்கள். இந் நிலைபாடானது அரசியல் ஊழல்களையும் நியாயப்படுத்தும் அல்லது எதிர்க்க முடியாத இயல்பான நிலையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைந்து ஊழலை ஒழித்திட முன்வந்தால் ஒழிய ஊழல் ஒழிந்திட வாய்ப்பில்லை என கருதுகிறோம்.அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி ஊழலுக்கு எதிராக சபதமேற்கும் நிகழ்வுகளை கட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில், ஊழலுக்கு எதிராக சபதமேற்கும் பொதுக்கூட்டத்தை 12.03.2016( சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடத்தியது. மக்கள் மாநாடு கட்சித் தலைவர் வழக்கறிஞர் க.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற‌ இந்தப் பொதுக்கூட்டத்தில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் ஊழல் ஒழிப்புப் போராளியுமான திரு. பிரசாந்த் பூசன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

விவசாயிகள் நலனை முன்னிறுத்தி 25-03-2018-ல் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டது, இதில் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தினால் நிலம் கையகப்படுத்தப் பட்ட விவசாயிகள் பிரச்சனைகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மாநாடு, சென்னையில் 02-12-2018 நடத்தப்பட்டது, இதில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் முன்னனியினர் பங்கேற்றனர்.

13-12-2018-ல் மேகதாது அணையை கட்ட முயற்ச்சியை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

கட்சியானது 2009 பாராளுமன்ற தேர்தல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது.

 

2009 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வடசென்னை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, வேலுர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆர்.கே நகர், சைதாபேட்டை, வேளச்சேரி, ஆலந்துர், தாம்பரம், சோழிங்கநல்லுர், அணைக்கட்டு, கீழ்வளூவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

2014 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வடசென்னை, சிவகங்கை, கோயம்புத்துர், திருப்பூர், ஊட்டி, நாகபட்டினம், சேலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பரங்குன்றம், சிவகாசி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மானாமதுரை, நன்னிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கொடி குறித்த விளக்கம்:

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கொடியானது சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என மூன்று வண்ணங்களை சம அளவில் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு

வெற்றிக்கான ஆற்றலையும், எதிர்கொள்ளக்கூடிய வல்லமையையும் உணர்த்துவதே சிவப்பு வண்ணம் அமைய பெற்றுள்ளது..

வெள்ளை

இந்த ஆற்றலும், வல்லமையும் அமைதியாகவும் மற்றும் நேர்மையாகவும் இருந்திட வேண்டும் என்பதை உணர்த்திடவே வெள்ளை வண்ணம் கொடியின் நடுவில் இடம் பெற்றுள்ளது.

மஞ்சள்

மஞ்சள் வண்ணம் தமிழ்நாடும், தமிழர்களும் அடைய வேண்டிய வெற்றியை உணர்த்துவதாக அமைய பெற்றுள்ளது.

 

புதிய வடிவத்தில் தமிழகத்தின் புதிய குரலாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சி களத்தில் நிற்கிறது. தமிழக மக்களின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்காக தன்னை அர்பணித்துக்கொண்டு செயல்பட்டு தமிழக மக்களின் புதிய நம்பிக்கையாக தமிழகத்தின் மாற்றத்தின் கருவியாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சி திகழும் என்பது உறுதி. இந்த மாற்றத்திற்கான பயணத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழக மக்களை இருகரம் கூப்பி அழைக்கிறோம்.