பத்திரிக்கை செய்தி : காவிரி பிரச்சனையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை ஏமாற்றத்துடன் வரவேற்கிறோம். மத்திய அரசே தீர்ப்பை அமுல்படுத்தித் தமிழகத்திற்கு நீதி வழங்கு. அதுவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காத்திட வழிவகுக்கும்.

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்
க. சக்திவேல் அறிக்கை

கர்நாடாக மற்றும் மத்திய அரசியல் காரணங்களால் நீண்ட காலமாக நீடித்து வரக்கூடிய ஒரு பிரச்சனையாக மட்டும் அன்றித் தமிழக மக்களின் குறிப்பாகத் தமிழக விவசாயிகளின் உயிர்நாடி பிரச்சனையாக உள்ள காவிரி நதி நீர் பிரச்சனைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மக்களைப் படாய்படுத்தி வருகிற இப்பிரச்சனை இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர வேண்டுமா வேண்டாமா என்பது மத்திய அரசின் வசம் உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் அமைத்திட போராட்டம், அதன் இடைக்கால அறிக்கையை அரசிதழில் வெளியிட போராட்டம், இறுதி அறிக்கையை அரசிதழில் வெளியிட போராட்டம், காவிரி நதிநீர் மேலாண்மை குழு அமைத்திட போராட்டம் எனப் பல நெடிய போராட்ட வரலாறுகளைக் கொண்ட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு இன்று முடிவு வந்துள்ளது என உறுதியாகக் கருதலாம்.

நதி நீரை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது என்று உச்சநீதி மன்றத் தீர்ப்பு வழியாக வடிகால் மாநிலங்களின் உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு அதிகமாக 14.7 டிஎம்சி உச்சநீதிமன்ற அளித்திருந்தாலும் மீதமுள்ள தமிழகத்திற்கான நீரைப்பெறுவதற்கான உறுதிப்பாட்டைக் கர்நாடகம் அளிக்குமா என்பது சந்தேகமானது தான். ஏனெனில், இதுகாலம் வரை தமிழகத்திற்கான நீரின் அளவில் பாதியை கூடக் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கவில்லை. அந்த அளவில், இது தமிழகத்திற்குப் பெரிய ஏமாற்றமாகக் கருத முடியாது. தமிழகம் கோரிய 264 டிஎம்சி நீரை அளிக்காமல், 14.75 டிஎம்சி நீரை குறைத்துக் கர்நாடகம் தரவேண்டிய அளவாக‌ 177.25 டிஎம்சியும் மொத்தத்தில் 404.25 டிஎம்சியும் நீரை தமிழகத்திற்கு உச்ச நீதி மன்றமானது ஒதுக்கீடு செய்துள்ளது ஏமாற்றமாக இருந்தாலும் தீர்ப்பில் உள்ள பிற ஆணைகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காவிரி நீரைப்பெறுவதற்கு ஏதுவாக உள்ளது என்பதை எண்ணும் போது தீர்ப்பு வரவேற்கக் கூடிய ஒன்று தான்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது முழுமையாக வரவேற்கக்கூடிய ஒன்று. இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனடியாகக் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திட முன்வரவேண்டும். இந்தப் பிரச்சனையில், மத்திய அரசு நாடாளுமன்றம் தான் வாரியம் அமைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள இயலும் என்பதை விட்டு விட்டு நாட்டின் ஒருமைப்பாட்டை மனதில் கொண்டும் கூட்டாச்சி அடிப்படைகளை உறுதிசெய்யும் வகையிலும் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*